சொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்?

சொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்?

PUBLISHED:21-Aug-2016

சொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்?

பலருக்கும் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அதற்கான  வழிமுறைகள் தெரியாமல் பலர் திண்டாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கெல்லாம் இங்கு  கூறப்போகும் ஆலோசனைகள் வழிகாட்டியாக இருக்கும்.

ஒரு தொழில் முனைவோருக்கு முதலில் தெளிவான திட்டமிடல் இருக்க வேண்டும். என்ன தொழில் செய்யப் போகிறோம் என்பதை முதலில் வரையறுத்து விட வேண்டும். பலருக்கு எந்தத் தொழிலை தேர்ந்தெடுப்பது என்பதிலேயே குழப்பம் வந்து விடுகிறது.

பொதுவாக நன்கு தெரிந்த தொழிலை தேர்ந்தெடுப்பது நல்லது. அல்லது எந்தத் தொழிலில் ஆர்வம் இருக்கிறதோ அந்தத் தொழிலில் சிறப்பான பயிற்சி பெற்று அதன்பிறகு தொழில் தொடங்கலாம்.
உதாரணமாக செல்போன் பழுது நீக்கும் மையத்தை ஒருவர் ஆரம்பிக்க விரும்புகிறார் என்று வைத்துக் கொள்ளுவோம். முதலில் அவர் செல்போன் பழுது நீக்கும் பயிற்சியைப் பெற வேண்டும். இதற்காக பல்வேறு பயிற்சி மையங்கள் இருக்கின்றன.

பயிற்சிக் கட்டணம் அதிகம் வாங்கும் கல்வி நிறுவனங்களும், குறைவாக வாங்கும் நிறுவனங்களும் உள்ளன. குறைவான கட்டணத்தில் சிறப்பான பயிற்சியை எந்த நிறுவனம் வழங்குகிறது என்பதை அறிந்து அப்பயிற்சி நிறுவனத்தில்சேரலாம்.
 ‘மக்கள் கல்வி நிறுவனம்‘ போன்ற லாப நோக்கில்லாத அரசு நிறுவனங்களில் பயிற்சி பெற்றால் செலவும் குறைவு. தரமான பயிற்சியையும் பெறலாம். அத்துடன் சான்றிதழையும் பெறலாம். இச்சான்றிதழ் வங்கிக்கடன் பெறுவதற்கு உதவிகர மாக இருக்கும்.

பயிற்சியை முடித்து சொந்தமாக பழுது நீக்கும் மையம் வைக்கும் போது பல்வேறு விஷங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். சரியான இடத்தை  தேர்ந்தெடுக்க வேண்டும். கடைகள் அதிகமுள்ள மெயின் ரோட்டில் இடத்தை தேர்ந்தெடுப்பது நல்லது.
 மையம் ஆரம்பிக்கப்பட்ட பிறகு கொஞ்ச நாட்களுக்கு பிட்நோட்டீஸ் அடித்து விளம்பரம் செய்து வாடிக்கையாளரைப் பெறலாம். வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.  அதற்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும்.
தொழில் ஆரம்பித்த பிறகு சிறிது நாட்களுக்கு தொழிலில் சுணக்க நிலை ஏற்படலாம். அதற்காக மனம் தளரக்கூடாது.

சுணக்கத்திற்கான காரணத்தைகக் கண்டறிந்து சரி செய்ய வேண்டும். ஆர்வத்தையும், தன்னம்பிக்கையும் எப்போதும் தளர விடக்கூடாது. தொழிலில் ஓரளவு வருமானம் பெருகத் தொடங்கினால் தொழிலை விரிவு படுத்துவதைப் பற்றிச் சிந்திக்கலாம். புதிய கிளைகளைத் தொடங்கலாம்.
 

பூர்விகா மொபைல் ஷோரூமின் உரிமையாளர்  ஆரம்பத்தில் குறைந்த முதலீட்டில் ஒரு விற்பனை மையத்தைத்தான் தொடங்கினார். பிறகு கிடைத்த வருமானத்தில் பெரும்பகுதியை தொழிலை விரிவுபடுத்தவே செலவிட்டார்.
அதனால்தான் இன்றைக்கு 200க்கும் மேற்பட்ட விற்பனை மையங்களுக்கு அவர் உரிமையாளராகி பெரும் தொழிலதிபராக உருவெடுத்திருக்கிறார்

ஒரு தொழில் முனைவோர் எப்போதும் ஒரு தொழில் ஆலோசகரின் தொடர்பில் இருப்பது நல்லது. ஏனெனில் செய்யும் தொழிலில் அவ்வப்போது பிரச்சனைகள் தோன்றும்.
பிரச்சனைகளுக்கு தீர்வு தெரியாமல் தத்தளிக்கும் போது தொழில் ஆலோசகரின் ஆலோசனைகள் வழிகாட்டியாக இருக்கும்.  




Recommended For You